பார்கவுன்சில் நுழைவுத் தேர்வும் - சர்ச்சைகளும் .

>> Sunday, December 19, 2010









இந்தியா போன்ற நாட்டில் விமர்சிப்பதற்கு பல செய்திகள் உண்டு , அதிலும் குறிப்பாக சட்ட கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள்  , நீதிபதிகள் சார்ந்த செய்திகள் என்றால்  எல்லா தரப்பு மக்களாலும் முக்கியத்துவம் கொடுத்து பேசப்பட்டு வரும் நிலையில் இன்றைக்கு சட்டம் பயிலும் மாணவர்கள் வழக்கறிஞர்களாக பதிவு செய்ய நுழைவுத்  தேர்வை நடத்த ஆயத்தமாகி வருகிறது இந்திய பார் கவுன்சில்


வழக்கறிஞர்கள் சட்டம் 1961: 

இந்த சட்டத்தின் பிரிவு 24 (1) (f) படி வழக்கறிஞர்களாக பதிவு செய்து கொள்ள சட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் பதிவு கட்டணமாக மாநில பார் கவுன்சிலுக்கு 600 ரூபாயும், இந்திய பார் கவுன்சிலுக்கு 150  ரூபாயும் தனி தனியாக வரவோலை(DD) மூலம் செலுத்தினால் போதுமானது

ஆனால் ஏப்ரல்’10 2010 அன்று இந்திய பார் கவுன்சில் இந்த வழக்கறிர்கள் சட்டத்தில் விதி 9, 10, 11, கீழ் பிரிவு 49 (1)(ah) பயன்படுத்தி 2009-2010ஆம் ஆண்டில் இருந்து சட்டப் படிப்பை முடிக்கிற மாணவர்கள், பார் கவுன்சிலில் பதிவு செய்து பயிற்சியில் ஈடுபட நுழைவு தேர்வை எழுத வேண்டும் என்பதை கட்டாயபடுத்தி ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது .

இது மாணவர்களுக்கு எதிரானா நோக்கில் அமல்படுத்த பட்டு இருக்கிற திட்டம் அல்ல என்று இந்திய பார் கவுன்சில் உறுப்பினர்கள் அவ்வப்போது சொன்னாலும் கூட இந்த நுழைவு தேர்வு தேவையா? தேவை இல்லையா?  என்று நாம்சிந்திக்க வேண்டி உள்ளது.  

நுழைவு தேர்வின் நோக்கம் என்ன?

ஜூலை 27, 2010 அன்று இந்திய பார் கவுன்சில் சார்பாக நிபுணர் குழுவிற்கு சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் நுழைவு தேர்வு நடத்தபடுவதின் நோக்கம், அதன் சிறப்புகள் குறித்தும் விளக்கபட்டுள்ளது அவை என்னவென்று சற்று பார்போம் .

1.   வழக்கறிஞராக சட்டத்தை பயிற்சி செய்கின்ற ஆற்றலை மதிப்பீடு செய்வதற்கு. 

2. சட்டத்தை பயிற்சி செய்ய தகுதி உள்ளதா என தொடக்க நிலையிலேயே மதிப்பீடு செய்ய. 

3. சட்டப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு குறைந்த பட்ச திட்ட அளவை நிர்ணயம் செய்திட.

4. சட்டத்தை பற்றிய ஆதாரமான அடிப்படை அறிவையும் , பகுத்து ஆராய்கிற திறனையும் மதிப்பீடு செய்திட

இவை நான்கையும் மையமாகக்கொண்டு தான் நுழைவுத் தேர்வு திட்டமிடபட்டு உள்ளதாம். 

தேர்விற்கான பாடம்

இந்த நுழைவு தேர்வில் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள்  மாணவர்கள் படித்த  பாடத்தில் இருந்து பார் கவுன்சில் சொல்லுகின்ற இருவது பாடங்கள்  ,   "அதிகாரவரம்பு" (jurisdictions )  குறித்து  பாடங்கள் , அடிப்படைச் சட்டங்கள்  , ஆராய்ந்து பதில் கூறுதல் , போன்ற பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப் படுமாம் . 

தேர்வு முறை

இந்தியா முழுவதும்  இந்த தேர்வு   இருபத்து ஏழு  மையங்களில் நடைபெறும் , ஒன்பது மொழிகளில் நடத்தப்படும் , விண்ணப்ப கட்டணம் 1300 ரூபாய்  (தேர்வுக்கான புத்தகங்கள் சேர்த்து ), open Book முறை ( தேர்வு மையத்திற்குள் புத்தகங்கள் , எழுதப்பட்ட விளக்க உரை போன்றவற்றின் உதவியோடு தேர்வை எழுதலாம் ) . OMR  விடைத் தாளில் விடை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஒரு சில முறைகளை பின்பற்றி இந்த தேர்வு தமிழிலும்   நடத்தப்படும் என்பது கூடுதல் தகவல்.

இந்த அறிவிப்புகளை எல்லாம் பார்த்துடன் அருமையான திட்டம், இது கண்டிப்பாக வரவேற்க பட வேண்டிய ஒன்று தான் என்று நாம் நினைத்தாலும் இந்த தேர்வுக்கு  எதிர்ப்பு அதிகமாகவே காணப்படுகிறது  

நுழைவு தேர்வு நடத்த வேண்டிய அவசியம் என்ன

இதுவரை இல்லாத அளவிற்கு இப்போது இந்திய பார் கவுன்சில் திடீர் என சட்டம் பயிலும் மாணவர்கள் மீது அதிக அக்கறையோடு நுழைவு தேர்வை கண்டிப்பாக நடத்தி விட வேண்டும் என்கின்ற முயற்சியில்  தீவிரமாக  இறங்கி உள்ளது . இது மாணவர்கள் சட்டப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு, குறைந்த பட்ச திட்ட அளவை நிர்ணயம் பெற வேண்டும்,  சட்டத்தை பற்றிய ஆதாரமான அடிப்படை அறிவையும் , பகுத்து ஆராய்கிற திறனையும் பெற்று விட வேண்டும் என்பதற்காக தான் என்பது உண்மை என்றால் இந்த நுழைவு தேர்வு நடத்தாமலேயே செய்யலாம் என்கின்ற கருத்தும் மாணவர்கள் மத்தியில் எழுந்து உள்ளது.  இந்தியா முழுவதும் எல்லா சட்ட கல்லூரியிலும் ஒரே மாதிரியான பாட திட்டத்தை கடைபிடிக்கலாம்.மாணவர்களுக்கு open Book  தேர்வு போன்ற முறையை அறிமுகபடுதலாம் . ஆனால் இதை எல்லாம் தவிர்த்து விட்டு மூன்று ஆண்டுகள் / ஐந்து ஆண்டுகள் படிப்பை முடித்த பிறகு மீண்டும் ஒரு தேர்வை எழுத வேண்டும் என்று சொன்னால், இது மாணவர்களை மட்டும் அல்ல பாடம் கற்பிக்கும் பேராசிரியர்களையும் இழிவுபடுத்தும் செயல், மூன்று / ஐந்து  ஆண்டுகள் நாங்கள் எழுதும்  தேர்வு எதற்கு நடத்த படுகிறது ? என்கின்ற நியாயமான கேள்விகளும் மாணவர்கள் முன் வைக்கின்றனர்

மருத்துவர், பொறியாளர், ஆசிரியர் என தொழில் படிப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் படிப்பை முடித்த பிறகு அந்த தொழிலை செய்ய அவர்களுக்கு தடை இல்லாத போது சட்டம் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் நுழைவு தேர்வு கட்டாயம் என்பது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த தேர்வை கண்டித்து சென்னையில் 29,அக்டோபர் அன்று அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரி மாணவர் மற்ற சட்ட கல்லூரி மாணவர்களோடு சேர்ந்து நடத்திய தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு பூட்டு போடும்  போராட்டம் மற்றும் சாலை மறியல்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ,    5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது, இதில் சுமார் ஐம்பது மாணவர்கள் கைது செய்ய பட்டார்கள் . 

                                                               29, அக்டோபர் 2010  

மேலும் எங்களின் போராட்டம் தொடரும் என்ற மாணவர்களின் அறிவிப்பு காவல் துறையை சற்று பதட்டம் அடைய செய்து இருக்கிறது

இந்தியா முழுவதுமே நீதிமன்றத்தில் பதிவாகிற வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து உள்ளது என்பதும்வீட்டில் இருந்து கொண்டே தேர்வு மட்டும் எழுதினால் போதும் என்று லட்சங்களை குவிக்கும் ஒரு சில அரசியல் தலைவர்கள் நடத்தும் தனியார் சட்ட கல்லூரிகள்வழக்கு - நீதிமன்றம் என்று நேரத்தையும் பணத்தையும் செலவு செய்வதை விட "கட்டபஞ்சாயத்து " போன்ற சட்டத்திற்கு எதிரான செயல்களில் மக்களிடம் நம்பிக்கை பெருகுவது  போன்ற சம்பவங்களால் நீதித்துறை சற்று செயல் இழந்தே காணப்படுகிற நிலையில் .

இந்த நுழைவு தேர்வை எதிர்ப்பது அநீதியாக தெரியலாம் 
ஆனால் இதை எதிர்ப்பது தான் சமுக நீதி என்று சீறுகிறார்கள்   
சட்ட கல்லூரி மாணவர்கள்

இப்படிப்பட்ட சூழலில் இந்த நுழைவு தேர்வு தேவை தானா?? என்கின்ற கேள்வியோடு இந்தியாவில் கற்பிக்கும் முறையில் மாற்றம் வரவேண்டும் என்றே தோன்றுகிறது.

                                                                    -தமிழரின் குரல்



0 comments:

Post a Comment

copy right  © தமிழரின்குரல்- தமிழனின்குரல்

Back to TOP